புனர்வாழ்வு பணியகங்களை ஸ்தாபிப்பதானது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது - மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

புனர்வாழ்வு பணியகங்களை ஸ்தாபிப்பதானது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது - மரிக்கார்

(எம்.வை.எம்.சியாம்)

புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் செயற்பாட்டு போராட்டக்காரர்களை புனர்வாழ்வு எனும் பெயரில் நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் கடுமையான பிரயத்தனம் காட்டுகிறது என்றும் புனர்வாழ்வு பணியகங்களை ஸ்தாபிப்பதானது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு என்ற பெயரில் நீண்ட காலத்திற்கு போராட்டக் காரர்களை தடுத்து வைக்க ஏதுவாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளது என்று குற்றச்சாட்டை முன்வைத்து புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்வதற்கு வருகை தந்திருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதை விடுத்து நாட்டில் கடுமையான சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு முயற்சிக்கிறார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் அரசாங்கம் பதவி விலகக்கோரி அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்போது அடிப்படைவாதிகள், போதைப் பொருள் பாவனையாளர்கள் என்று கூறி புனர்வாழ்வு பணியகங்களை அமைத்து அங்கு தடுத்து வைத்து அவர்களை ஒடுக்குவதற்கு பார்க்கிறார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானியர்களை இவ்வாறே சிறைப்பிடித்து தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைத்தார்கள். மறுபுறத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் இலட்சக்கான, மில்லியன் கணக்கான யூதர்களை முகாம்களுக்கு அனுப்பி கொலை செய்தார்.

புனர்வாழ்வு பணியகங்களை ஸ்தாபிப்பதனாது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது செயற்பாடாகும். இதன் மூலம் மக்களை அடக்கி ஆளுவதற்கு முடியும் என்று நினைக்கிறார்கள்.

நாம் இப்பொழுது செல்ல வேண்டிய சிறந்த இடம் நீதிமன்றமாகும். அரசாங்கம் புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அமுல்ப்படுத்தி அதன் மூலம் நாட்டு பிரஜைகளின் உரிமைகளை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கிறது. இதற்கான நீதியை நாம் இங்கு மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். அதன் காரணமாகவே நீதிமன்றத்திற்கு வந்தோம்.

நாடு முழுவதும் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. இந்த நிலையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளுடைய ஒத்துழைப்புகள் மிகவும் முக்கியமானது. இருப்பினும் சர்வதேச நாடுகளுடைய ஒத்துழைப்புகள் தேவைப்படும் போது நாட்டு மக்களுக்கான அவர்களின் உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க கூடிய நாடு என்ற தோற்றப்பாட்டை அவர்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.

அதியுயர் வலயங்கள், அமைதிவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினரை கைது செய்வது மற்றும் அவர்களை இவ்வாறு முகாம்களில் அடைப்பது போன்ற செயற்பாடுகள் சர்வதேச நாடுகள் இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கையை வலுவிழக்க செய்யும்.

இந்நிலையில் வர்த்தமானியை முழுமையாக இரத்து செய்து வலுவிழக்க செய்யுமாறு கோருகிறோம். குறித்த சட்டமூலம் மக்கள் சுதந்திரம் முழுமையாக இல்லாது போகிறது. இருப்பினும் புனர்வாழ்வு என்ற பெயரில் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க ஏதுவாக இந்த சட்டமூலம் அமைந்துள்ளதாகவும் அதற்கு எதிராக தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

No comments:

Post a Comment