இராவணனும், சிவவழிபாடும் இலங்கையில் இருந்ததில்லையென்று நான் கூறவேயில்லை ! உறுதியாகக் கூறுகின்றார் சரத் வீரசேகர எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

இராவணனும், சிவவழிபாடும் இலங்கையில் இருந்ததில்லையென்று நான் கூறவேயில்லை ! உறுதியாகக் கூறுகின்றார் சரத் வீரசேகர எம்.பி.

'இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்​றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை' என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

'இராவணன் (இராவணேஸ்வரன் அல்ல) என்று அழைக்கப்படும் ஒரு மன்னன் இலங்கையில் ஆட்சி செய்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புராணக்கதைகளின்படி, அவர் இந்தியாவில் சீதையை (இராமரின் மனைவி) கடத்தி, தனது புகழ்பெற்ற யந்திரயாவில் (மயில் விமானம்) இலங்கைக்கு அழைத்து வந்தார். இராவணன் இந்து வரலாற்று நுாலான இராமாயணத்தின் முக்கிய எதிரியாக குறிப்பிடப்படுகின்றார்' என்றும் சரத் வீரசேகர எம்.பி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கடைகளை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த கடைகளை பெரும்பான்மையின வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அது தொடர்பில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி சரத் வீரசேகர எம்.பி உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில் இலங்கையில் இராவணேஸ்வரன் என்ற அரசர் இருந்ததில்லை என்னும் கருத்தொன்றினையும் பதிவு செய்திருந்தார். அக்கருத்து தொடர்பாக தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக சரத் வீரசேகர எம்.பி நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு' என்ற அமைப்பின் செயற்பாட்டாளர் வினோத் பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு தமது அமைப்பின் ஊடக அறிக்யொன்றினை வழங்கியிருந்தார்.

குறித்த ஊடக அறிக்கையில் இராவணன் என்ற அரசன் இல்லை என்றும், இலங்கையில் சிவ வழிபாடு இல்லை என்றும் நான் கூறியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

செப்டெம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை கவனமாகக் கேட்குமாறு சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பினரையும், அதன் செயற்பாட்டாளர் பாலச்சந்திரனையும் கேட்டுக் கொள்கிறேன். 

எனது உரையில் எந்தவொரு இடத்திலும் இராவணன் என்றழைக்கப்படும் அரசன் இல்லை என்றோ சிவவழிபாடு சம்பந்தமாக எதனையுமோ நான் ஒருபோதும் கூறவில்லை. இராவணேஸ்வரன் என்று ஒரு அரசன் இருந்ததில்லை என்றே கூறியுள்ளேன்.

பாலச்சந்திரன் என்னை இனவாதி என்று கூறி, சிறுபிள்ளைத்தனமாக இராவணன் உண்மையில் இருந்தான் என்பதை ஆவணங்களில் உள்ள பல்வேறு புத்தகங்களைக் குறிப்பிட்டு நிரூபித்துக் காட்டுகிறார். இராவணன் என்று ஒரு மன்னன் இல்லை என்று நான் ஒருபோதும் குறிப்பிடாமையினால், அவருடைய முழு அறிக்கையும் அர்த்தமற்றதாகிறது.

இராவணன் (இராவணேஸ்வரன் அல்ல) என்று அழைக்கப்படும் ஒரு மன்னன் இலங்கையில் ஆட்சி செய்தவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 'ரா' - என்றால் சூரியன் மற்றும் வன -என்றால் வன்ஷயா அல்லது பழங்குடி என்று அர்த்தமாகும். 

எனவே இராவணன் என்றால் 'சூரியனின் பழங்குடி' என்று பொருள். அவர் எல்லாத் திறமைகளிலும் கலைகளிலும் வல்லவராக இருந்தார். மன்னன் இராவணன் எப்போதும் இராவணன் என்றே அழைக்கப்படுகிறார், இராவணேஸ்வரன் என்று அல்ல.

பாலச்சந்திரன், சமூக நல்லிணக்கத்தில் உண்மையாக அக்கறை கொண்டவராக இருந்தால், கண்ணியமான, அமைதியை விரும்பும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை (பெரும்பாலும் TNA மற்றும் ACTC) கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தமிழ் எம்.பி ஒருவர் இராவணேஸ்வரனைக் குறிப்பிட்டு தனது இனவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றார். அதனால்தான் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்றேன்.

முல்லைத்தீவு குருந்து விகாரையில், தொல்பொருள் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட 2000 வருடங்கள் பழைமையான தூபி உள்ளது. புத்தரின் திருவுருவங்களை அதில் வைப்பதற்கு சமய வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் குண்டர் குழுக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. 

மேலும் தூபிக்கு ஒரு மலர் கூட வைக்க முடியாமல் தலைமைப் பீடாதிபதிகளும் மகாசங்கத்தினரும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பும் இதே குண்டர்கள் குழுக்கள் அதிகாரபூர்வமான இடத்தை ஆய்வு செய்வதற்கு வருகை தந்த குழுவைத் தாக்கி விரட்டியடித்தனர்.

போரின் உச்சக்கட்டத்தில் அம்பாறை கோணகலையில் கருவுற்றிருந்த சிங்கள தாய்மார்களைக் கூட பயங்கரவாதிகள் கொன்று குவித்த போது, கொழும்பில் வீதிகளில் 'இந்து வேல்விழா' ஊர்வலம் நடத்துவதற்கு சிங்களவர்கள் ஒருபோதும் இடையூறு செய்யவில்லை என்பதை பாலச்சந்திரனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். அப்படித்தான் ஏனைய மதங்களை நாங்கள் மதிக்கிறோம்.

திருகோணமலையில் கோணேஸ்வரர் கோயிவிலுக்குச் செல்லும் வீதியில் 60 பெட்டிக்கடைகளில் சிங்களவர்களே அதிகம் காணப்படுகின்றனர். தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குறித்த பெட்டிக்கடைகள் பொலித்தீன் மற்றும் மரத்துண்டுகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதனால் கடலின் அழகு பார்வைக்கு இடையூறாக உள்ளது. இதனை மறுபுறம் மாற்றி புதிய ஒரு ஒழுங்கில் நிர்மாணிப்பதற்கு ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

குறித்த கடைகளை அதே நபர்களுக்கு கொடுக்க திருக்கோணஸ்வர கோயில் குழு உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அனுமதி வழங்கியபோதும், தமிழ்த் தரப்பு எம்.பி.க்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அங்குள்ள அனைத்து சிங்களவர்களின் கடைகளையும் அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். தங்கள் வாதத்தை நியாயப்படுத்த இராவணேஸ்வரன் என்ற அரசனைக் குறிப்பிட்டார்கள்.

பாலச்சந்திரன் உண்மையில் சமூக நல்லிணக்கத்தில் அக்கறை கொண்டிருந்தால், என்னை இனவாதி என்று கூறும் முன், அது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய அனைத்து உரைகளையும் முழுமையாக கேட்குமாறு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பாலச்சந்திரனின் தகவலுக்கு இன்னுமொன்றினை கூறிக்கொள்கின்றேன். நான் கடற்படையில் பணியிலிருந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளேன் என்று கூறுவதை பொருமையாகக் கருதுகிறேன். நானும் சிங்கள பௌத்த சகாக்களும் பல சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு இரத்த தானம் செய்துள்ளோம். அப்படியானால் யார் உண்மையான இனவாதிகள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

புலிகளால் மனிதக் கேடயமாக வைக்கப்பட்டிருந்த 2,95,000 தமிழ் மக்களை மீட்டு போரில் வெற்றி பெற்றோம். அந்தப் பணியில் ஈடுபட்ட பல சிங்களப் படையினர் தம் உயிரைத் தியாகம் செய்தனர். பாலச்சந்திரனின் கூற்றுப்படி இனவாதிகளாகிய நாங்கள் அதைச் செய்யும் போது, 'சமூக நல்லிணக்கத்திற்காக தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் அல்லது இராணுவத்தை நோக்கி தப்பிச் செல்ல முயன்றவர்களைக் கொல்வதை நிறுத்துங்கள் என்று புலிகளிடம் வேண்டுகோள் விடுத்ததிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் .

தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக 4,95,000 ஆயிரம் கண்ணிவெடிகளை அகற்றிய போது, பாலச்சந்திரனோ அல்லது எந்த ஒரு தமிழ் எம்.பியோ வந்து தமிழ் சகோதரர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் இராணுவ வீரருக்கு ஒரு தேநீரையாவது வழங்கியதை நான் காணவில்லை.

இராணுவ வீரர்களாகிய நாம் எமது தனிமனிதர்களின் பணத்தைப் பயன்படுத்தி வடக்கில் தமிழர்களுக்காக சுமார் 8000 வீடுகளைக் கட்டிக்கொடுத்த போது, பாலச்சந்திரனோ அல்லது எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினருமோ அந்தத் திட்டத்திற்கு ஒரு கூரை ஓடு கூட நன்கொடையாக வழங்கியதை நான் கவனித்ததில்லை.

றிசாத் ஏ காதர்
ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment