நான் குறிப்பிட்டவை இரண்டரை வருடத்திற்குள் உண்மையானது : ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்கிறார் குமார வெல்கம - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

நான் குறிப்பிட்டவை இரண்டரை வருடத்திற்குள் உண்மையானது : ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்கிறார் குமார வெல்கம

(இராஜதுரை ஹஷான்)

பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியதால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் புகழுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற புதிய லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் இன்று முழு நாட்டுக்கும் பாரியதொரு வினையாக மாறியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது தனது சகோதரரான கோட்டபய ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்குவதாக அறிவித்ததற்கு நான் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினேன்.

பிரதேச சபை உறுப்பினர் பதவி கூட வகிக்காத ஒருவர் எமது நாட்டின் அரசியல் நிர்வாக கட்டமைப்பின் பிரகாரம் அரச தலைவராக செயற்பட முடியாது, ஆகவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்தேன். குடும்ப ஆலோசனைக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

நான் குறிப்பிட்டவை இரண்டரை வருட காலத்திற்குள் உண்மையானது. கோட்டபய ராஜபக்ஷ பலவீனமான அரச தலைவராகவே பதவி விலகினார்.

அவர் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்கள் இன்று முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர் எவ்வித குறையுமின்றி அரச வரபிரசாதங்களுடன் சுகபோகமாக வாழ்கிறார்.

கோட்டபய ராஜபக்ஷவினால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் புகழுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது. கட்சி தலைவரின் கருத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மதிப்பளிப்பதில்லை.

சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் புதிய லங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைவார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம் என்றார்.

No comments:

Post a Comment