அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள் - வசந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள் - வசந்த சமரசிங்க

(எம்.வை.எம்.சியாம்)

புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்கள் செயற்பாட்டு போராட்டக்காரர்களை புனர்வாழ்வு எனும் பெயரில் நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில், நாம் அரசாங்கத்திடம் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறோம். போராட்டக்காரர்கள் என்ன தவறு செய்தார்கள்? போராட்டக்காரர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை, நாட்டை கடன் பொறிக்குள் சிக்க வைத்தவர்களை, நாட்டு மக்களை கடன் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்களை, மக்களை ஏமாற்றியவர்களை மற்றும் அரச சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களை விரட்டுவதற்கு போராடியவர்கள் அவர்களாவார்.

நாடு மற்றும் நாட்டு மக்களுடைய எதிர்காலத்திற்காக போராடியவர்கள் மக்கள் செயற்பாட்டாளர்கள். புனர்வாழ்வு அளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு கிடையாது.

இன்று போராட்டம் தவறானது என்று கருதினால் ஜனாதிபதி ரணில் உடன் பதவி விலகி மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துமாறு கூறுங்கள். முடியாது ஏனென்றால் போராட்டம் நியாயமானது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டக்காரர்கள் செயற்பட்டார்கள்.

உண்மையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டியவர்களை அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் வைத்து கொண்டு போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு முனைகிறார்கள்.

இன்று அரசாங்கத்தில் உள்ளவர்களே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள்தான் உண்மையில் திருட்டுக்கும் ஊழலுக்கும் அடிமையாகி இருக்கிறார்கள். முதலில் அமைச்சரவையை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment