2022 வீதிப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்திய இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தொடர் முழுவதும் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத அணியாகவும் இடம்பெற்ற 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக திகழ்ந்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி (ஒரு போட்டி கைவிடப்பட்டிருந்தது) இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
நேற்றிரவு இந்தியாவின் ராய்பூரில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய லெஜண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடிய நாமன் ஒஜா ஆட்டமிழக்காது 108 (71) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதில் 15 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்குகின்றன.
அது தவிர, வினய் குமார் 36 (21) ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 19 (13) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் குலசேகர 3 விக்கெட்டுகளையும், இசுறு உதான 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதற்கமைய, 196 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் இஷான் ஜயரத்ன 51 (22) ஓட்டங்களையும், மஹேல உடவத்த 26 (19) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளையும், அபிமன்யு மித்துன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த வகையில், இந்திய லெஜெண்ட்ஸ் அணி 33 ஓட்டங்களால் இறுதிப் போட்டியை வெற்றி கொண்டு, வீதி பாதுகாப்பு உலகத் தொடரை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக நாமன் ஒஜா தெரிவானதோடு, தொடரின நாயகனாக திலகரத்ன டில்ஷான் தெரிவானார்.
No comments:
Post a Comment