மாகாண சபைத் தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

மாகாண சபைத் தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மாகாண சபைத் தவிசாளர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள், தொலைபேசி உள்ளிட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபமொன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால், மாகாண ஆளுனநர்கள், மாகாண சபை செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த சுற்றுநிரூபத்தின்படி, மாகாண சபைத் தவிசாளருக்கு ஒரேயொரு உத்தியோகபூர்வ மோட்டார் வாகனமொன்றை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்திற்காக 150 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என்பதுடன், சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கேற்ப எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலும்,அலுவலக தொலைபேசி கொடுப்பனவுக்காக 5000 ரூபாவும், கையடக்கத் தொலைபேசி கொடுப்பனவு, வதிவிட தொலைபேசி கொடுப்பனவு ஆகியவற்றுக்காக தலா 2500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர், மாகாண சபைத் தவிசாளர்களுக்கு 2, 3 வாகனங்களும், எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவு அதிகளவில் வழங்கப்பட்டபோதிலும் அவை தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் நிர்வாகக் காலம் தற்போது முடிவுற்றுள்ளதுடன், மீண்டும் சபை கூடும் வரையில் மாகாண சபைத் தவிசாளர்கள் அதிகாரம் உடையவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment