(எம்.மனோசித்ரா)
சுயநலமானதும், பேராசையுடைய கலாசாரமுமே இன்று நாடு பின்னடைவை சந்தித்துள்ளமைக்காக காரணமாகும். இதே போன்று தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது. எனவே அடுத்து தலைமைத்துவத்தை ஏற்பதற்கு பொதுமக்கள் தயராக வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பேருவளையில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) ஆராதானையொன்றின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு தற்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் சுயநலமான, பேராசையுடைய கலாசாரமாகும். எமது நாட்டுத் தலைவர்களே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.
முதலாவதாக இவர்கள் இனங்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தினர். அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு மதப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்தனர்.
எமது தலைவர்கள் கடந்த 74 ஆண்டுகளாக நிச்சயமற்ற வாழ்க்கையையே உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இதே போன்று தொடர்ந்தும் பயணித்தால் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் எஞ்சாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு நாமும் தயாராக வேண்டும்.
ஆனால் தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது வழங்கி விட்டு, அதன் பின்னர் எமது உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள் என்று போராடுவது பொறுத்தமற்றதாக இருக்காது என்றார்.
No comments:
Post a Comment