சுதந்திரக் கட்சியில் ஒரு சிலருக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் இருக்க முடியாத ஒரு வகை நோய் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

சுதந்திரக் கட்சியில் ஒரு சிலருக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் இருக்க முடியாத ஒரு வகை நோய் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் இருக்க முடியாத ஒருவகை நோய் உள்ளது. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கேகாலை பகுதியில் சனிக்கிழமை (01) இரவு இடம்பெற்ற சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பி;ட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இருப்பினும் கட்சி உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறவில்லை. பொதுக் கொள்கை அடிப்படையில் கட்சித் தீர்மானத்துக்கமைய செயற்பட்டார்கள்.

1994ஆம் ஆண்டு காலத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியமைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு சிறந்த நோக்கத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியாக இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்தோம். தேசிய அரசாங்கத்தின் நோக்கம் வெற்றி பெறாவிடினும், தற்போதைய நிலையை போன்று நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளாகவில்லை.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஊடாக பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கினோம். கூட்டணியாக இணைந்தாலும் பங்காளிக் கட்சிகளின் கருத்துகளுக்கு பொதுஜன பெரமுன மதிப்பளிக்கவில்லை. மாறாக தன்னிச்சையாக செயற்பட்டது. இறுதியில் விளைவு பாரதூரமாக முடிந்தது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்திய நிலையில் முறையற்ற வகையில் அமைச்சரவை அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமைந்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம், அதுவல்லாவிடின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கக்கூடாது என கட்சி செயற்குழுவில் உத்தியோகப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் சுதந்திர கட்சியின் ஒரு சில உறுபபினர்கள் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளோம். சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் இல்லாமல் இருக்க முடியாத ஒரு நோய் உள்ளது. கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment