(ஆர்.ராம்)
உள்ளக சுய நிர்ணயத்தினை உறுதிப்படுத்தும் வகையில் மக்களிடத்தில் இறைமையை பகிரும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் பட்சத்தில், அதற்கு முழுமையான ஆதரவினை அளிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகவே உள்ளதாக அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள போதும், தற்போது வரையில் அவை நடைமுறைப்படுத்தப்படாதுள்ள நிலையில், இதயசுத்தியுடன் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் முயற்சிகள் தாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க உள்ளிட்டவர்கள் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நீடித்துக் கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்தாமல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது.
ஆகவே, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காண்பதற்கான அணுகுமுறைகளை செய்யும் சம காலத்தில் தேசிய இனப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
தற்போதைய ஆட்சியாளர்கள் சிந்தித்து இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களாக இருந்தால், அது வரவேற்கத்தக்கதாகும்.
அந்த வகையில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருந்தால், புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
ஏனென்றால், இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பானது அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை.
குறிப்பாக, தமிழ் மக்கள் உள்வாங்கப்படாத நிலையில்தான் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் அந்த அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளாத நிலைமைதான் தற்போது வரையில் நீடிக்கின்றது. அதுமட்டுமன்றி தற்போதைய அரசியலமைப்பானது 22 தடவைகள் திருத்தப்பட்டும் விட்டது.
ஆகவே, இலங்கை ஒரு பல்லின நாடு என்ற வகையில் அனைத்து இனங்களுக்குரிய அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
அதேவேளை புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் இறைமையானது மக்களிடத்தில் பாரப்படுத்தப்பட்டதாகவும், தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு இணைந்த பூமியில் அவர்களின் உள்ளக சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட வேண்டும்.
அத்துடன், பிரதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையிலும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவசியமாகிறது.
மேலும், தமிழ் மக்கள் நாட்டை பிரிக்குமாறு கோரவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிருமாறே கோருகின்றார்கள். இது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமல்ல. பிரித்தானியாவில் பிராந்தியங்களுக்கு சுயமாக தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவ்விதமான அதிகார கட்டமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். ஆனால், அவை தற்போது வரையில் நடைமுறையில் சாத்தியமாகவில்லை. ஆகவே, தற்போது அவ்விதமானதொரு முயற்சி எடுக்கப்படுவதாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, பல தருணங்களில் இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை காண்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதியாக 2015ஆம் ஆண்டு பாராளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இடைக்கால அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கடந்த கால முயற்சிகளில் விளைவுகளாக கிடைத்த விடயங்களையும் உள்வாங்கி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியமாகிறது. எம்மை பொறுத்த வரையில் பிரதான விடயமாக இருப்பது தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாகும். அது எமது மக்களின் அபிலாசைகளை உறுதி செய்யும் வகையிலானதாக இருக்க வேண்டும். அதன் மூலமே மக்கள் எதிர்நோக்கும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கருதுகின்றோம்.
அந்த அடிப்படையில் இவ்விடயங்களை மையப்படுத்தி எந்தவொரு நபரும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிகளை எடுப்பவராக இருந்தால், அவர்களுக்கு நாம் ஆதரவுகளையும் ஒத்துழைப்புக்களையும் அளிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment