(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்
போதைப் பொருள் வர்த்தகத்துக்கும், பாதாள குழுக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களுடன் ஆயுதங்களும் வருகின்றன. இங்கு நடக்கும் குற்றச் செயல்களை ஒரு சிலர் வெளிநாடுகளில் இருந்து வழிநடத்துகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மினுவாங்கொட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நாடு முழுவதும் பாதாள குழுவினரால் முன்னெடுக்கப்படும் கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனரா என்று தெரியவில்லை.
இந்நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் தற்போதைய இலகுவான பணியாக மக்கள் துன்பங்களால் உருவாகியுள்ள பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடக்கும் நடவடிக்கைகள் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரை கைது செய்கின்றனர்.
நாட்டின் பொலிஸார் மக்களுக்காக சட்டத்தை பாதுகாக்க வேண்டும். ஆனால் பாதாள செயற்பாடுகள் தொடர்பில் முறையாக நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இப்போது பொலிஸார் முழுமையாக ஆர்ப்பாட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர் என்றார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் ரிலான் அலஸ் கூறுகையில், போதைப் பொருள் வர்த்தகமும் பாதாள குழுவும் ஒன்றாகவே பயணிக்கின்றது. கடந்த காலங்களில் போதைப் பொருள் நாட்டுக்கு வரும் போது அதனுடன் ஆயுதங்களும் வருகின்றன. வேண்டுமென்றால் கடந்த மாதங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்பிக்கலாம். சில சம்பவங்கள் வெளிநாடுகளில் இருந்தே நடக்கின்றன.
இப்போது நடந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால் கொலை வழக்கொன்றில் பக்கத்து வீட்டில் உள்ள மூவர் பிரதிவாதிகளாகும். அவர்களே கொள்ளப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தொடர்பான பண கொடுக்கல் வாங்கல், குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படும் போது அதற்கு பழிவாங்கலாக இன்னுமொருவரை கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
அமைதியான போராட்டத்துக்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ள போதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில்தான் செயற்படுகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment