ஏழு அறிவுடையவர் அவரது உதவியாளர்களை வைத்து 22 ஆவது திருத்தச் சட்ட மூல விவாதத்தை தடுத்துள்ளார் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, October 7, 2022

ஏழு அறிவுடையவர் அவரது உதவியாளர்களை வைத்து 22 ஆவது திருத்தச் சட்ட மூல விவாதத்தை தடுத்துள்ளார் - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானமாகும். ஏழு அறிவுடையவர் என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்காவிலிருந்து கொண்டு அவரது உதவியாளர்கள் மூலம் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளமை கவலைக்குரியது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபை இரு நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வியாழக்கிழமை (06) திருத்தச் சட்ட மூல வரைபு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் இரட்டை குடியுரிமை உள்ளவர் அரசியலில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளதால் ஆளும் தரப்பின் ஒரு சிலர் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

ஏழு அறிவினை உடையவர் என வர்ணிக்கப்பட்டவர் தற்போது அமெரிக்காவில் இருந்துகொண்டு தனது உதவியாளர்களுடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விவாததத்துக்கு எடுத்துக் கொள்வதை தடுத்துள்ளமை கவலைக்குரியது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை அரசாங்கம் ஒரு வார காலத்துக்கு பிற்போட்டுள்ளது. இத்தீர்மானத்தை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துள்ளது. 7 அறிவுடையவரின் தேவைக்காக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டு மக்களின் நிதியை வீண்விரயமாக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment