நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும், அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது - நாலக கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும், அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது - நாலக கொடஹேவா

(இராஜதுரை ஹஷான்)

வரையறையற்ற அரசமுறை கடன் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றன நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக கடன் பெறுவதில் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும், அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மத்திய வங்கியின் தரவின்படி ஆகஸ்ட் மாதத்தின் பண வீக்கம் 70.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பண வீக்கம் சடுதியாக அதிகரித்து செல்லும்.

பண வீக்கம் அதிகரிப்பினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.

கடந்த அரசாங்கம் வரையறையற்ற வகையில் கண்மூடித்தனமாக நாணயம் அச்சிட்டதால் பண வீக்கம் தீவிரமடைந்தது. கடந்த அரசாங்கம் செய்த தவறையே தற்போயைத அரசாங்கமும் தொடர்கிறது. பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண அரச செலவுகளை நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் செலவு 3851 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரச செலவு 4427 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டிய பின்னணியில் அரச செலவுகளை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. இராஜாங்க அமைச்சுக்கள் 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை அமைச்சுக்களையும் விஸ்தரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வரையறையற்ற அரசமுறை கடன் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றன நிலையிலும் அரசாங்கம் பொருளாதார மீட்சிக்காக கடன் பெறுவதில் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்கள் மீது வரி சுமத்துவதை காட்டிலும்,அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment