ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணம் - ஹர்ஷன ராஜ கருணா - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணம் - ஹர்ஷன ராஜ கருணா

(எம்.வை.எம்.சியாம்)

ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணம் என்றும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவு குழுவினை அமைத்து அவர்களுக்கு உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்பினை வெளியிட்டு வருகிறார்கள். மக்களால் புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு 3 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டு இருந்த போதிலும் அதன் ஊடாக எதிர்பார்த்த அபிலாஷைகள் மக்களுக்கு கிடைக்க பெறாமையால் மக்களின் எதிர்ப்பு இவ்வாறு வலுப்பெற்றுள்ளது.

நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்பவர்களை அடக்குமுறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது

அரசாங்கம் கொழும்பின் பல்வேறு பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடாகும். ஜனாதிபதிக்கு இது போன்ற சட்டங்களை அமுல்ப்படுத்த அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறான அடக்குமுறைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்று 24 மணித்தியாலங்களுக்குள் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இன்றளவிலும் அவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகிறது.

மேலும் அரச சேவையில் உள்ளவர்களுக்கு தமது கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது. மேலும் போராட்டங்களை மேற்கொள்ள முன்னர் அதற்கான அனுமதி பெற வேண்டும்.

இது போன்ற மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் அரசாங்கம் முன்னெடுக்கும் போது நாட்டினுள் எதிர்ப்பு வலுப்பெறுவதை போன்று சர்வதேச நாடுகளுடைய எதிர்ப்பினையும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

இருப்பினும் ஜனாதிபதி இதனை அறிந்தும் கூட மொட்டு கட்சியினரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறார். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள் அன்றாடம் கூலி தொழில் செய்யும் தரப்பினர் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும் அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் பங்களிப்பை வழங்குமாறு கோரியது. தேசிய சபை ஒன்றை ஆரம்பத்திலேயே அமைக்குமாறு நாம் கோரியிருந்தோம்.

இருப்பினும் பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நியமித்து விட்டு இன்று தேசிய சபையில் இணையுமாறு கோருகிறார்கள். பதவிகள் தேசிய சபையின் ஊடாகவே நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் சுய விருப்பிற்கு ஏற்பவே பதவிகள் வழங்க்கப்பட்டு இருக்கிறது. எனவே நாம் இன்று தேசிய சபையில் இணைவது வேடிக்கையாகும்.

மேலும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். உடனே பாராளுமன்ற தெரிவிக்குழுவினை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment