(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து சென்று எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் உரையாற்ற ஆளும் கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் நூற்றுக்கு 5 வீதம் வழங்குவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடியது.
இதன்போது ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களுக்கு சபையில் உரையாற்றுவதற்கு குறிப்பிட்டதொரு நேரம் ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இதற்கு தீர்வாக எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றம் கூடும் நேரத்தை அரை மணித்தியாலத்தால் அதிகரித்து, அதில் 50 வீதம் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என முன்வைத்த பிரேரணைக்கு பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழுவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் நூற்றுக்கு 5 வீதம் இவர்களுக்கு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பில் இருந்து பிரிந்து எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான அணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிப்பதற்கு குறிப்பிட்டதொரு நேரம் இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment