நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை என்கிறார் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை என்கிறார் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல

(இராஜதுரை ஹஷான்)

மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்ற நிலையில் நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை. சுகாதாரத்துறை அமைச்சும், அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது மகிழ்வுக்குரியது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற இலங்கை மருத்துவ சாதனங்களின் தொழிங்சங்கத்தின் 7ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மருத்துவ சாதனங்களின் தொழிற்சங்கம் கடந்த காலங்களில் விமர்சனங்களுக்குள்ளான போதும் பல சவால்களை வெற்றி கொண்டு முன்னேற்றமடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சுகாதார துறைக்கு பல ஒத்துழைப்புக்களை இச்சங்கம் வழங்கியுள்ளது.

சிறந்த அனுபவமுள்ள தரப்பினர் இந்த தொழிற்துறையில் உள்ள காரணத்தினால் பல சவால்களை வெற்றி கொள்ள முடிந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து இவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் அமைச்சுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. சுகாதாரத்துறை பணிக்குழுவினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சுகாதார சேவையாளர்கள் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்படுவது மகிழ்வுக்குரியது. மருந்து தட்டுப்பாடு என குறிப்பிடப்படுகிறது. ஒரு சில மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

சுகாதாரத்துறையில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு விசேட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment