புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை துன்புறுத்தும் நோக்குடன், 'புனர்வாழ்வு பணியகம்' எனும் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக கூறி விஷேட மனுவொன்று சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்ட களத்தில் முன்னின்று செயற்பாட்டாதாக கூறப்படும் சட்டத்தரணி அமில சுயம எகொடமஹவத்த, சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த விஷேட மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அனுகூலத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரை பிரதிவாதியாக பெயரிட்டுள்ள இந்த விஷேட மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலமானது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் மக்களின் நீதித்துறை அதிகாரங்களை இல்லாமல் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மூல அறிமுகம் பிரகாரம், தவறான அல்லது நாசகார செயல்களில் ஈடுபடும் போராளிகள் மற்றும் தனி நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறப்பட்டிருப்பினும், அந்த விதிமுறைகளுக்கு எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில், உத்தேச சட்ட மூலம் கருத்து சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஏனைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இச்சட்ட மூலம் சட்ட நீதித்துறையை இராணுவ மயமாக்குவதற்கு வழி வகுக்கும் எனவும் அது மக்களின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் மனுதாரர் மனுவூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறான நிலையில் குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பாரளுமன்றின் மூன்றிலிரு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment