டொலர் இன்மையினால் கரையோர புகையிரத சேவையில் வேகத்தை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

டொலர் இன்மையினால் கரையோர புகையிரத சேவையில் வேகத்தை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

கரையோர புகையிரத பாதை பல ஆண்டு காலமாக திருத்தம் செய்யாத காரணத்தால் கரையோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தப் பணிகளுக்கான பொருட்கள் மற்றும் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய டொலர் இன்மையினால் கரையோர புகையிரத சேவையில் வேகத்தை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கரையோர புகையிரத பாதை திருத்த பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் நிறைவு பெறும், ஆகவே புகையிரத தாமதத்தினால் பொதுப் பயணிகள் கடமை ரீதியில் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தற்போது தீர்வு வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, புகையிரத சேவை அரச நிறுவனமாகும். அத்துடன் பழமையானது. புகையிர சேவையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு எல்ல ஓ.டி.சி. புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் கொழும்பு கோட்டை தொடக்கம், கண்டி வரை அதிசொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.

புகையிரத திணைக்களம் தொடர்ந்து நட்டமடையும் ஒரு அரச நிறுவனமாகவே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வருமானம் 1,082 மில்லியனாக காணப்பட்ட போதும் எரிபொருளுக்கான செலவு 1,348 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. மாதாந்த எரிபொருளுக்கான செலவை கூட முகாமைத்துவம் செய்வதற்கு கூட போதுமான வருமானம் கிடைப்பதில்லை.

புகையிரத சேவையை பாரிய அளவில் மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. புகையிரத தண்டவாள பாதைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்க வேண்டும்.

ஒரு சில புகையிரத தண்டவாள பாதைகள் 40 வருட காலமாக எவ்வித திருத்தமுமின்றிய வகையில் பயன்படுத்தப்படுகிறது.

கரையோர புகையிரத தண்டவாள பாதைகள் துறுப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. புதிய தண்டவாளங்கள் மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய நிதி பற்றாக்குறை காணப்படுவதால் திருத்த பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.

ஆகவே நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்ய கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோர புகையிரத பாதையில் புகையிரதங்கள் முன்பு போல் வேகமாக சென்றால் விபத்து நேரிடும்.

கரையோர புகையிரத சேவை தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுப் பயணிகள் தமது கடமைகளில் ஈடுப்படும் போது அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு வழங்க முடியாது. கரையோர புகையிரத சேவை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழமைக்கு திரும்பும் என்றார்.

No comments:

Post a Comment