இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார சபையின் உப தலைவர் நலிந்த இளங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (10) கோப் குழுவில் முன்னிலையான இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த கருத்தை வாபஸ் பெறுவதாக நேற்றுமுன்தினம் (11) அறிவித்திருந்தார்.
மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக உணவு கூட உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வௌியிடப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதியோ, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ அல்லது இந்திய தூதரகத்தினாலோ தாம் கருத்தை வாபஸ் பெறும் நிலைப்பாட்டிற்கு அழுத்தம் விடுக்கப்படவில்லை எனவும் அவர் அறிவித்திருந்தார்.
இதேவேளை, மன்னாரில் நிர்மாணிக்க திட்டமிடட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
நேற்றையதினம் (12) இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்திருந்த அறிவித்தலில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment