உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் உள்ள ஸ்ரீவார்ஷ்னே கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால், அவரை ஒரு மாதம் கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
அக்கல்லூரியின் சட்டத்துறை பேராசிரியராக எஸ்.ஆர்.காலீத் என்பவர் பணியாற்றி வருகிறார். இஸ்லாமியரான இவர், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் தொழுகை செய்துள்ளார்.
இதை ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, இதை கண்ட உத்தரப்பிரதேச இந்துத்துவா அமைப்புகள் பேராசிரியர் காலீத் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியத்தை கண்டித்தனர்.
மேலும், அலிகரின் மற்றொரு கல்வி நிறுவனமான டி.எஸ்.கல்லூரியின் மாணவர்கள் பேரவை சார்பில் அப்பகுதியின் குவார்ஸி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் நடவடிக்கை எடுக்கும் வரை உபியின் அனைத்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், வேறுவழியின்றி ஸ்ரீவார்ஷ்னே கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர் தொழுகை நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை, பேராசிரியர் காலீத்தை ஒரு மாதத்திற்கு கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment