இந்திய, ஏனைய கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி மருந்து பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் : இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு கோப் குழு பரிந்துரை - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, June 1, 2022

demo-image

இந்திய, ஏனைய கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி மருந்து பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் : இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு கோப் குழு பரிந்துரை

1651074597-1651046926-praliment_L
இந்தியக் கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவிகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சரித ஹேரத் பரிந்துரை வழங்கினார்.

இந்தியக் கடனுதவியில் 200 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றிருந்தாலும் 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி வரையில் 55.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரண வழங்கல்களுக்கு மாத்திரமே அமைச்சின் மருத்துவ உப குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்ததாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

அது நிதியுதவியின் 28% எனவும், 2022 மே 18 ஆம் திகதி வரை 92.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான விலைப்பட்டியல் மாத்திரம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குழுவின் தலைவரால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும் சூழ்நிலையில் இந்த நிதியைப் பயன்படுத்தி தேவையான மருந்துகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர்.

விஷேடமாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை பொதுமக்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்ட பிரச்சினை என்பதால் தற்போதைய நெருக்கடி நிலைமையை விரைவில் தீர்த்து அத்தியாவசிய மருந்துகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். 

அதற்கமைய, அந்த நிதியைப் பயன்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை வழங்கினார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தற்பொழுது அது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய அத்தியாவசிய மருந்துகளை இந்த நிதியினூடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

விஷேடமாக அமைச்சர்கள் சிலர் இந்தக் காலப்பகுதியில் நியமிக்கப்பட்டமையாலும் இந்தப் பணிகள் தாமதமடைந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்திய கடனுதவிக்கு மேலதிகமாக, மருந்துப் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்குக் கிடைத்துள்ள உலக வங்கிக் கடன் (WB), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி (WHO), ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி (ADB) மற்றும் ஏனைய நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள உதவிகளை விரைவாகப் பயன்படுத்தாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

விஷேடமாக இந்தியக் கடனுதவி உள்ளிட்ட இந்த அனைத்து உதவிகளும் 330 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் எனவும் அவை இதுவரை செலவு செய்யப்படவில்லை என்பது இங்கு புலப்பட்டது. 

விரைவில் நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் அனுமதியைப் பெற்று இந்த நிதியைப் பயன்படுத்தி மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தால் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை மருந்துப் பற்றாக்குறை ஏற்படாது என வருகை தந்திருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய கோப் தலைவர், மருந்துப் பற்றாக்குறையை நீக்குவதற்கு கிடைக்கப்பெற்றுள்ள அமெரிக்க டொலர் நிதியைச் சரியாக முகாமைத்துவம் செய்து விரைவாகப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். 

அதனால் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும் முகாமைத்துவம் செய்வதில் விரைவாக அதனை மேற்கொள்ளாமை தொடர்பில் சிக்கலொன்றை அவதானிப்பதாகவும் கோப் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது ரூபாய் தட்டுப்பாடு இருந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது ஒன்லைன் ஊடாக நிதி அமைச்சின் செயலாளரும் குழுவில் பங்குபற்றி அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவாக அதனைத் தீர்த்துக்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *