O/L பரீட்சையை முன்னிட்டு மின் துண்டிப்பு நேர அட்டவணையில் மாற்றம் : இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

O/L பரீட்சையை முன்னிட்டு மின் துண்டிப்பு நேர அட்டவணையில் மாற்றம் : இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன் கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜூன் முதலாம் திகதி வரை மின் துண்டிப்பிற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பரீட்சைகள் இடம்பெறும் நேரத்திலும், மாலை 6 மணிக்கு பின்னரும் மின்சாரத்தை துண்டிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே இது குறித்து கவனத்தில் கொண்டு மின் துண்டிப்பினை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு வார இறுதி நாட்களான நாளை சனிக்கிழமை, நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் எதிர்வரும் 29 ஆம் திகதிகளிலும் மாலை 6 மணிக்கு பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இதற்கு தேவையான நீரை விநியோகிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பரீட்சைகள் ஆரம்பமான பின்னர் மின் துண்டிப்பு குறித்த நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment