(எம்.மனோசித்ரா)
பிரதி சபாநாயகராக இம்தியாய் பாக்கீர் மாக்கரை பரிந்துரைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி எம்மிடம் கூறியிருந்தால் நாமும் அவருக்கே ஆதரவளித்திருப்போம். அவ்வாறன்றி இறுதி நேரத்தில் எதற்காக சதி செய்தனர்? அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச செயற்படுகிறார் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது பிரதி சபாநாயகர் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து தெளிவுபடுத்தும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சி என்பது ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமல்ல. அரசாங்கத்திலிருந்து விலகிய நாமும், ஜே.வி.பி.யும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியிலேயே உள்ளோம்.
எனவே எமக்கான ஒரு பொது வேட்பாளராகவே பிரதி சபாநாயகர் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தினால் அனைத்தும் சிதைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஜே.வி.பி.யின் வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சஜித் உள்ளார்.
நாம் பரிந்துரைத்த பெயரில் அவர்களுக்கு ஆட்சேபனை அல்லது விருப்பமின்மை காணப்பட்டிருக்குமாயின் அதனை முன்னரே எம்மிடம் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் பரிந்துரைக்கும் நபருக்கு நாம் எமது ஆதரவை வழங்கியிருப்போம்.
தற்போது சுயாதீனமாக செயற்படும் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றோம் என்று காண்பிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் இலக்காகும். நாம் பொதுஜன பெரமுனவுடனேயே இருக்கின்றோம் என்று காண்பிக்கும் இலக்கு சஜித்தினுடையதாகும்.
இரு தரப்புமே எம்மை இலக்கு வைத்தே செயற்படுகின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு சஜித் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்படுகின்றார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment