(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவினை பொதுஜன பெரமுன மிகவும் சூட்சுமமாக அதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஐக்கிய மக்கள் சக்தி இறுதி நேரத்தில் தீர்மானத்தை மாற்றி, அரசாங்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமை துரதிஷ்டவசமானதும் கவலைக்குரியதுமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது பிரதி சபாநாயகர் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து தெளிவுபடுத்தும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சுயாதீனமாக செயற்படும் 11 கட்சித் தலைவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்தாலோசித்த பின்னரே எதிர்க்கட்சியின் சார்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவை பரிந்துரைப்பதற்கு தீர்மானித்தோம்.
நாமும் தற்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படுவதால் எதிர்க்கட்சியிலிருந்து அவரை தெரிவு செய்ய நேற்றைய (நேற்றுமுன்தினம்) கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்த தீர்மானம் தொடர்பில் இன்று (நேற்று) பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ரஞ்சித் மத்தும பண்டாரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.
அதன்போது எதுவும் கூறாதவர்கள் முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான பின்னர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை பரிந்துரைக்க வேண்டாம் என்று கூறினர். எனினும் எமக்கிருந்த குறுகிய காலத்தில் அதனை செய்ய முடியாது என்பதால், நாம் தீர்மானத்தை மாற்றவில்லை.
பின்னர் நாம் சியம்பலாப்பிட்டியவின் பெயரை பரிந்துரைத்த போது, ஐக்கிய மக்கள் சக்தி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை பரிந்துரைத்தது. எதிர்த்தரப்பினரான எம்மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவை தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிப்பதாக அறிவித்தது.
உண்மையில் பொதுஜன பெரமுனவின் சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயரே பரிந்துரைக்கப்படவிருந்தது. இறுதி நேரத்தில் அதனை அறிவிக்காது ஜீ.எல்.பீரிஸ் எமது வேட்பாளரையே ஆதரிப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் பொதுஜன பெரமுனவினரின் ஆதரவும் 148 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. இந்த பிளவு ஏற்பட்டிருக்காவிட்டால் இதில் சுயாதீனமாக இயங்கும் 40 உறுப்பினர்களின் வாக்குகளும், டலஸ் அழகப்பெரும போன்ற அரசாங்கத்தை ஆதரிக்காத 13 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைக்கப் பெற்றிருக்காது.
அதற்கமைய எதிர்க்கட்சியின் சார்பில் பொதுவான ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருந்தால் மேற்கூறப்பட்ட 53 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்ற 65 வாக்குகளையும் சேர்த்து மிக இலகுவாக 121 வாக்குகளைப் பெற்றிருக்க முடியும்.
அவ்வாறெனில் அரசாங்கத்திற்கு 95 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருக்கும். இதன் ஊடாக நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் அரசாங்கத்திற்கு ஒரு சிறந்த அறிவிப்பையும் எம்மால் வழங்கியிருக்க முடியும்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி இறுதி நேரத்தில் எடுத்த தீர்மானத்தினால் அரசாங்கம் இன்றும் தமக்கே பலம் இருப்பதாக இலகுவாகக் காண்பித்துள்ளது. உண்மையில் இது துரதிஷ்டவசமானதும் கவலைக்குரியதுமாகும் என்றார்.
No comments:
Post a Comment