(எம்.மனோசித்ரா)
அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கோ, தன்னிச்சையான கைதுகளுக்கோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக் கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை எதற்காக பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாடும் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியையும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பெரிதும் கவலை கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஏற்கனவே எம்மால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, பொதுமக்களின் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால பிரகடனம் தீர்வாகாது என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.
அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை முடக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அதேவேளை போராட்டங்கள் வன்முறையாக இருக்கக்கூடாது, எப்போதும் அமைதியானதாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நாடும் மக்களும் எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியையும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஜனாதிபதி ஏன் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக தெளிவுபடுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அத்தோடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையை உடனடியாக இரத்து செய்யுமாறும், இறையான்மையின் அம்சங்களான கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறும் அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் மக்களை அமைதியாக இருக்கவும், அமைதியான முறையில் செயல்படவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இதனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment