(எம்.மனோசித்ரா)
நாட்டில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் உள்ளிட்டவற்றைக் கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று சனிக்கிழமை காலை முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொழும்பு 14 ஆமர் வீதியில் எரிவாயுவைக் கோரி மக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிரான்பாஸ், கொட்டஞ்சேனை, புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சந்தியில் நான்கு வீதிகளையும் சிலிண்டர்களால் மறித்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் குறித்த பகுதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டன.
மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த தொடர் போராட்டத்தினையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லிட்ரோ சிலிண்டர்களுடன் லொறியொன்று வரவழைக்கப்பட்டு அங்கிருந்த மக்களுக்கு அவை விநியோகிக்கப்பட்டன.
அவ்வழியாகச் சென்ற பொலிஸ் வாகனமொன்றை செல்ல விடாது மறித்து வாகனத்திற்கு முன்னாள் வீதியில் அமர்ந்து நபரொருவர் எதிர்ப்பினை வெளியிட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது சுமார் 100 க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எரிவாயு சிலிண்டர்கள் லொறியிலிருந்து நேரடியாக விநியோகிக்ப்பட்ட போது அங்கு பெருந்திரளான மக்கள் குவிந்துள்ளனர். இதன்போது சிலர் எரிவாயு நிரப்பப்படாத சிலிண்டர்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தினால் ஆமர் வீதி சந்தியூடான போக்குவரத்துக்கள் முழுமையாக ஸ்தம்பிதடைந்தன. இதனால் மருதானை, கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தொழிலுக்காகவும் ஏனைய அலுவல்களுக்காகவும் சென்ற மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment