(இராஜதுரை ஹஷான்)
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்முதலுக்காக கிடைக்கப் பெறும் கடனுதவி தொகையைக்கு மேலதிகமாக கடன் தொகையை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 1.2 பில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் கொள்வனவிற்காக செலவாகும் டொலர் பெறுமதி ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளதே தவிர குறைவடையவில்லை. இம்மாதத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவிற்காக கிடைக்கப் பெற்ற 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 400 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளன. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருளுக்காக கிடைக்கப் பெறும் கடனுதவி தொகையை 750 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்க 1.2 பில்லியன் டொலர்களை வழங்குவதாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு கிடைக்கப் பெறவில்லை என்றார்.
No comments:
Post a Comment