(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்குச்சீட்டினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி அணியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளவர்களுக்கு காண்பித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில், இன்று (05) வியாழக்கிழமை பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து வாய் மொழி மூலமான கேள்வி பதில் இடம்பெற்றதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் பதவிக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
கடந்த மாதம் 30ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபிடிய, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இருவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டதால் நிலையியல் கட்டளையின் 4ஆவது பிரிவிற்கமை இரகசிய வாக்கினை நடத்தி பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என சபாநாயகர் சபையில் அறிவித்தார்.
வாக்களிப்போர் தங்களின் வாக்கு அட்டையில் தமது தெரிவு, தங்களின் பெயர் மற்றும் தங்களின் உத்தியோகப்பூர்வ கையொப்பத்தை இடவேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்த்தரப்பின் பிரதம கொறோடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, இரகசிய வாக்கெடுப்பில் பெயர் மற்றும் கையொப்பம் இடப்படும் போது எவ்வாறு இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என சபாநாயகரிடம் வினவினார்.
நிலையியல் கட்டளையின் 4ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதையே குறிப்பிட்டேன், எனது கட்டளையை குறிப்பிடவில்லை. ஆகவே சபை நடவடிக்கையை குளறுபடியாக்காமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றார்.
இரகசிய வாக்கெடுப்பினை நடத்துவதை தவிர்த்து இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பை கோருங்கள் என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் வலியுறுத்தினார்.
இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாக்கு அட்டைகள் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு அமைய இன்றையதினமே அழிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்ரமரட்ன சபையில் தெரிவித்தார்.
வாக்களிப்பவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் அதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் பொறுப்பு என சபாநாயகர் குறிப்பிட்டதை தொடர்ந்து வாக்களிப்பு இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக வாக்களித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வாக்களிக்கும் போது முஜிபூர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருண ஆகியோர் அதனை தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார்கள்.
சபாநாயகர் ஹர்ஷன ராஜகருணவின் பெயரை குறிப்பிட்டு புகைப்படம் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள், இரகசியத் தன்மை பற்றி கதைத்துக் கொண்டு இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ வாக்கு அட்டையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அதனை எதிர்த்தரப்பினர் தரப்பில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களை நோக்கி காண்பித்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி சபாநாயகர்'எதிர்க்கட்சித் தலைவரே உங்களின் செயற்பாடு முற்றிலும் தவறானது 'என்றார்.
No comments:
Post a Comment