(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானத்திற்கு இன்று காலை வரை சகல தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருந்த வேளை இறுதித் தருணத்தில் அத்தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது. எதிர்த்தரப்பினரது செயற்பாடு ஒரு காட்டிக் கொடுப்பு என்றே கருதுகிறேன் என புதிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.
பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தின் பதவியல்லாத போதும் சுதந்திர கட்சியினரது அரசியல் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினேன். புதிய பிரதி சபாநாயகர் தெரிவு சிறந்த முறையில் இடம்பெற்றது. எனக்கு ஆதரவாக வாக்களித்த சகல தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் சார்பில் எனது பெயரை பரிந்துரை செய்யும் தீர்மானம் நேற்று எடுக்கப்பட்டது. இன்று காலை வரை அத்தீர்மானம் மாற்றமடையவில்லை. ஆனால் இறுதித் தருணத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவி ஊடாக எதிர்க்கட்சியினரது பலத்தை ஒன்றினைந்து உறுதிப்படுத்த எதிர்பார்த்தோம். இருப்பினும் எதிர்க்கட்சியினரது தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டமை ஒரு காட்டிக் கொடுப்பாக கருதுகிறேன் என்றார்.
No comments:
Post a Comment