கோட்டா கோ கம, மைனா கோ கம ஆர்ப்பட்டங்கள் மீது தாக்குதல்கள் : இன்று இடம்பெறவுள்ள அடையாள அணிவகுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 26, 2022

கோட்டா கோ கம, மைனா கோ கம ஆர்ப்பட்டங்கள் மீது தாக்குதல்கள் : இன்று இடம்பெறவுள்ள அடையாள அணிவகுப்பு

(எம்.மனோசித்ரா)

காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட மைனா கோ கம போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்புக்கள் வெள்ளிக்கிழமை (27.05.2022) இடம்பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கமைய சந்தேகநபர்களை இனங்காண்பதற்கான அடையாள அணிவகுப்புக்கள் 10 இடம்பெறவிருந்தன. இவற்றில் 4 நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டன. இதன் பின்னர் பெண்ணொருவர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய சந்தேகநபர்களை இனங்காண்பதற்கான 6 அடையாள அணிவகுப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன. அத்தோடு வழக்கு ஜூன் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று வெ வ்வேறு பிரதேச சபை உறுப்பினர்களிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று காலை வரை 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment