அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் : பொதுஜன பெரமுனவினர் இரட்டை குடியுரிமையுடையவரை பாதுகாக்க முயற்சி - சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 26, 2022

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் : பொதுஜன பெரமுனவினர் இரட்டை குடியுரிமையுடையவரை பாதுகாக்க முயற்சி - சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள்

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் முக்கிய சில விடயங்கள் திருத்தப்படாமல் உத்தேச 21 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளன. 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய 21 ஆவது திருத்தம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூல வரைபு தொடர்பில் இன்று சகல கட்சி தலைவர்களுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து எதிர்வரும் அமைச்சரவையில் சட்ட மூலத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுயாதீன தரப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி மற்றும் அரசியலமைப்பு திருத்தம் மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் கம்யூனிச கட்சியின் பதில் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குறிப்பிட்டதாவது, பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யபபட்டு, 21 ஆவது திருத்தம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அரசியல் கட்டமைப்பை முழுமையாக வெறுக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் மாத்திரம்தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் முக்கிய பல விடயங்கள் திருத்தங்களுடன் 21 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். இருப்பினும் 19 ஆவது திருத்தத்தின் ஒரு சில விடயங்கள் எவ்வித திருத்தங்களுமற்ற வகையில் 21 ஆவது சட்ட வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

21 ஆவது திருத்த சட்ட மூல வரைபில் காணப்படும் குறைபாடுகளை திருத்திக் கொள்ளாவிடின் அது 20 ஆவது திருத்தத்தை போன்று பாரதூரமான விளைவுகளை மீண்டும். ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது வரைபில் உள்ள குறைபாடுகளை திருத்தி புதிய திருத்தத்தை ஒரு மாத காலத்திற்குள் செயற்படுத்துமாறு வலியுறுத்தினோம்.

இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமலிருக்கவும், இரட்டை குடியுரிமையுடைய நபரை பாதுகாக்கவும் முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.

21 ஆவது திருத்தம் முறையற்ற வகையில் செயற்படுத்தப்பட்டால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும். ஆகவே 21 ஆவது திருத்த விவகாரத்தில் பிரதமர் பொறுப்புடனும், மக்கள் தரப்பில் இருந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

21 ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றவே எதிர்பார்த்துள்ளேன். பொருளாதார மீட்சிக்கு அரசியல் ஸ்தீரத்தன்மை மற்றும் சமூக ஸ்தீரத்தன்மை அவசியம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை ஒட்டு மொத்த மக்களும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட முடியாது.

21 ஆவது திருத்த சட்ட மூல வரைபு தொடர்பில் இன்று சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடப்படவுள்ளேன். சகல தரப்பினரது யோசனைகளும் சிறந்த முறையில் கிடைக்கும் பட்சத்தில் அதற்கு முக்கியத்துவம் வழங்கி 21 ஆவது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ளேன்.

பொருளதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண சகல தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசியலமைப்பு திருத்தத்தில் எதிர்த்தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமானது என்பதை அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். சகல கட்சி தலைவர்களுடனான பேச்சுவார்த்தை தீர்மானமிக்கதாக அமையும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீதி மற்றும் அரசியலமைப்பு திருத்த மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபினை முன்வைத்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசியலமைப்பு சபையினை ஸ்தாபித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை மீள் ஸ்தாபித்தல், இரட்டை குடியுரிமை கொண்டவர் பாராளுமன்றில் அங்கத்தவராக பதவி வகிப்பதற்கு தடைவித்pத்தல், அரச உயர் பதவி நியமனத்தின் போது அரசியலமைப்பு சபையின் ஆலோசனையை பெறல் அச்சட்ட மூல வரைபின் முக்கிய திருத்த யோசனைகளாக அச்சட்ட மூல வரைபின் முக்கிய திருத்த யோசனைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மீண்டும் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காளர் நாயகம் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய பெறுகை ஆணைக்குழுக்கள் அவையாகும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் பாராளுமன்றிற்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் திருத்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment