(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் மாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை பொறுப்பானவர்கள் எவரும் பதிலளிக்காத காரணத்தினால் தன்னை சந்திப்பதற்கு எவருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 4 பிரதான பௌத்த நிக்காயாக்களும் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு குறித்த யோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எனினும் அதற்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும், தமது யோசனைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விசனம் வெளியிட்ட பௌத்த நிக்காயாக்கள், இதே நிலைமை தொடர்ந்தார் சங்க மகா பிரகடனத்தை அறிவிப்போம் என்று எச்சரித்திருந்தன.
ஏப்ரல் 21 ஆம் திகதி இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மறுநாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இதற்கு பதிலளிக்கப்பட்டிருந்தது. இதன் போது மகா சங்கத்தினரின் யோசனைகளை செயற்படுத்த தான் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இவ்வாறு கூறப்பட்டு இரு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், அவை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment