நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் பங்கேற்புடன் அமெரிக்காவில் 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீடு செல்லுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவில் வாழும் சிங்கள மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி இவ்வார்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்றன.
ஒரே நேரத்தில் அமெரிக்காவின் சகலபகுதிகளிலும் 'கோட்டா வெளியேற வேண்டும்' எனக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது. அதற்கமைய உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் கூறுகையில், குறித்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கம், வொஷிங்டன், கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ், சென் பிரான்சிஸ்கோ மற்றும் சி.என்.என் தலைமையகம் அமைந்துள்ள அட்லாண்டா உள்ளிட்ட 50 க்கும் அதிகமான நகரங்களில் எதிரொலித்தன .
இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு கோரி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமெரிக்காவில் ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்வனவு செய்த சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யுமாறு மாகாண செனட்டர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைப்பது குறித்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த குழுவினர் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டங்களில் கல்வியியலாளர்கள், மாணவர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் இன மத மொழி வேறுபாடின்றி கலந்து கொண்டனர்.
இலங்கையின் ஜனாதிபதி ஒருவரை இராஜினாமா செய்யுமாறு கோரி வெளிநாடு ஒன்றில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
கேசரி
No comments:
Post a Comment