போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 7, 2022

போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் வெள்ளியன்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்களைக் கண்டு அஞ்சியே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்களின் குரலை ஒருபோதும் முடக்க முடியாது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் பலம் முற்றாக தோல்வியடைந்துள்ளது.

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமளவிற்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியோ, ஆயுதப் போராட்ட முயற்சியோ இடம்பெறவில்லை. அவ்வாறிருக்கையில் எதற்காக அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது?

மக்களின் போராட்டத்தைக் கண்டு ஜனாதிபதி அஞ்சியுள்ளார். அதன் காரணமாகவே இவ்வாறான சட்டங்கள் ஊடாக போராட்டங்களை முடக்குவதற்கு முயற்சிக்கின்றார். அரசாங்கத்திற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.

எனவே அவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வேண்டும். மாறாக ஆர்ப்பாட்டங்களை முடக்க முயற்சித்தால் அவை மேலும் தீவிரமடையும். வன்முறைகள் தலைதூக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஜனநாயக போராட்டங்களில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம், நீர்த் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment