மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது : பஷிலின் தேவைக்கமையவே பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் - வீரசுமன வீரசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, May 23, 2022

மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது : பஷிலின் தேவைக்கமையவே பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் - வீரசுமன வீரசிங்க

(இராஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தல் ஊடாகவே அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தேவைக்கமையவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் என கம்யூனிச கட்சியின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் மற்றும் சமூக விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பை முழுமையாக புறக்கணித்து புதிய அரசியல் கட்டமைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டும் என்ற காரணத்தினால் அரசியல் கொள்கைக்கு முன்னுரிமை வழங்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் அதன் அழுத்தம் தொடர்ந்து அரச கட்டமைப்பில் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை. மக்களின் ஆதரவில்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கம், 21ஆவது திருத்தம் நிறைவேற்றம் தொடர்பில் நாட்டு மக்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

அரசியலமைப்பு திருத்தம் விவகாரத்தில் மீண்டும் முறைகேடு இடம்பெற்றால் அது பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். பொதுத் தேர்தல் ஊடாகவே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களின் நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதை விடுத்து முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள்.

தங்களின் எதிர்கால அரசியல் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment