கட்சி தலைவருக்கு அறிவித்ததன் பின்னரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன் : விவசாயிகளுக்கு சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்படும் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, May 23, 2022

கட்சி தலைவருக்கு அறிவித்ததன் பின்னரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன் : விவசாயிகளுக்கு சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்படும் - மஹிந்த அமரவீர

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளமை சுதந்திர கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு தடையாக அமையாது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்ததன் பின்னரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன். விவசாயிகளுக்கு சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்படும் என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள போது பொறுப்பினை ஏற்க முன்வருவது அவசியமானது. ஒரு சில காரணிகளுக்காக நிர்வாக கட்டமைப்பை பாதிப்பிற்குள்ளாக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்பதால் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தியதை கருத்திற் கொண்டு, கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்ததன் பின்னரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன்.

விவசாயத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ள தவறான தீர்மானங்களை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை முனனெடுக்கப்படும்.

எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழலை ஏற்படுத்தும் வகையில் விசேட திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பது குறித்து ஜனாதிபதி மற்றும் வலுசக்தி அமைச்சருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

உரம் தொடர்பான கொள்கை மாற்றியமைக்கப்படும். விவசாயிகளுக்கு சாதகமாக அமையும் தீர்மானங்கள் செயற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment