(எம்.ஆர்.எம்.வஸீம்,இராஜதுரை ஹஷான்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிஷ்டசாலி 2015 ஆம் ஆண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் பிரதமராகினார். தற்போது ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் பிரதமராகியுள்ளார். அதுவும் அதிஷ்டமானது. சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படாவிடின் எதிர்கால தலைமுறையினருக்கும் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் பாராளுமன்றில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய இளம் போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியினரும் உள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. வாக்குகளினால் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் கலவரத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பாராளுமன்றம் மற்றும் சர்வஜன வாக்குரிமை நடைமுறையில் உள்ளவரை கலவரத்தினால் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது தோற்றம் பெறும் குறைபாடுகளை தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தற்போதைய சகல பிரச்சினைக்கும் மூல காரணியாக அமைந்துள்ளது. அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதிக்கு பி.பி ஜயசுந்தர பொருளாதார ஆலோசகராக இருந்தார். 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை காணப்பட்ட கடன் பொருளாதாரம் 2022ஆம் ஆண்டு வங்குரோத்து பொருளாதாரமாக மாற்றமடைந்துள்ளது.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். வரலாற்று காலததில் இடம்பெற்ற வன்முறைச் சம்வங்கள் பல விடயங்களை உணர்த்தியுள்ளது. கறுப்பு ஜூலை சம்பவம் உள்ளிட்ட பல கலவரங்களில் கூட உரிய பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
கடந்த 09 ஆம் திகதி அலரி மாளிகையில் கூடியவர்கள் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை கவலைக்குரியது. தவறான ஆலோசனைகள் இப்போராட்டத்திற்கு பிரதான காரணியாக அமைந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் வன்முறை தலைத்தூக்கியது. இதற்கு சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும்.
வன்முறை சம்பவங்களின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொலிஸார் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்கள். நாட்டில் நீதி இல்லையாயின் பாரிய விளைவுகள் ஏற்படும்.
தற்போதைய நிலைமையில் முரண்பட்டுக் கொண்டிருந்தால் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. சொத்துக்களை ஈடு வைத்து அரசியலில் ஈடுப்பட்டுள்ளோம். உண்மைத் தன்மையுடன் அரசியல் புரிந்த காரணத்தினால் மக்களால் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment