எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனவும் அனைவருமாக ஒன்றினைந்து டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் மட்டக்களப்பு மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரித்த வண்ணம் இருப்பதை கருத்திற் கொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் இன்று பாடசாலைகளுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்ககையைப் பொறுத்த வரையில் டெங்கு நோய்த் தாக்கம் மிக வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இதனடிப்படையில் டெங்குத் தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களுக்குள் 422 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இரு இள வயது மரணங்களும் சம்பவித்துள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதியில் மாத்திரம் 240 பேர் டெங்கு நோயாளர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் இன்றையதினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டார்.
இதன்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம்கண்டு பாடசாலை நிருவாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் எந்தவொரு உயர்வு, தாழ்வும் பாராது உச்சகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி இளையதம்பி உதயகுமார், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு கள பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆலோசனைக்கு அமைவாக சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment