(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பின் வரிசை உறுப்பினர்கள் ஆளும் தரப்பினரா அல்லது எதிர்த்தரப்பினரா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. எத்தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பதை வெகுவிரைவில் தீர்மானிப்போம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுத்த ஒரு சில தவறான தீர்மானங்கள் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தவறான தீர்மானங்களை பலமுறை பகிரங்கமாக சுட்டிக்காட்டிய போதும் அவை திருத்திக் கொள்ளப்படாத காரணத்தினால் இன்று முழு நாடும் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.
நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.
மக்களாணைக்கு முரணாக செயற்பட்டதன் காரணமாக இன்று மக்களாணை முழுமையாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன், முழு அரசியல் கட்டமைப்பிற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வ கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் வியூகம் எத்தன்மையிலானது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பின் வரிசை உறுப்பினர்கள் ஆளும் தரப்பினரா அல்லது எதிர்த்தரப்பினரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. எத்தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பதை வெகுவிரைவில் தீர்மானிப்போம் என்றார்.
No comments:
Post a Comment