பொருளாதார முன்னேற்றத்திற்கே பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு : 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு குறித்து அவதானத்துடன் உள்ளோம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Thursday, May 26, 2022

பொருளாதார முன்னேற்றத்திற்கே பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு : 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு குறித்து அவதானத்துடன் உள்ளோம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு திருத்தத்தை காட்டிலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்காகவே பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு குறித்து அவதானத்துடன் உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எந்த நாட்டிலும் அரசியலமைப்பு ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ இலக்காகக் கொண்டு உருவாக்கப்படுவதில்லை.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஒரு தனி குடும்பத்தை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை தற்போது புகழ்பாடும் அரசியல்வாதிகள்தான் கடந்த காலங்களில் 19 ஆவது திருத்தம் நாட்டின் சாபம் என விமர்சித்தார்கள்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் என பொதுஜன பெரமுன தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு காரணிகளினால் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அரசாங்கத்துடன் ஒன்றினைந்திருந்தவர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை உருவாக்கினார்கள்.

பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார மீட்சி மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு திருத்தத்தை காட்டிலும், பொருளாதார மீட்சி, நடைமுறை சமூக பிரச்சினைக்கு தீர்வு காண அவதானம் செலுத்த வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு குறித்து அதிக அவதானம் செலுத்தி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment