நாம் பதவிகளுக்கு சோரம் போகின்றவர்களல்ல. அரசாங்கம் நாடு தொடர்பில் எடுக்கும் நியாயமான தீர்மானங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் தொடர்ந்தும் நாம் ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளோமென்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், எனினும் முறையான நடவடிக்கைகளுக்கு மாறாக தலையணைகளை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாரில்லையென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய தருணத்தில் அரசாங்கம் தலைகளை மாற்றும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டியது அவசியம்.
எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்கி வந்துள்ளோம். நாம் பிரதமர் பதவிக்கோ அல்லது அமைச்சுப் பதவிகளுக்கோ சோரம் போகின்றவர்கள் அல்ல. நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் நியாயமான தீர்மானங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.
நாம் எப்போதும் வெளிப்படையாக. செயற்பட்டு வருகின்றோம். எம்மிடம் எந்த ஒளிவுமறைவும் கிடையாது.
இப்போதாவது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமும் இந்தியாவிடமும் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதை நாம் பாராட்டுகின்றோம். எனினும் இந்தியா நிதியுதவி வழங்குவது பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கல்ல.
அரசாங்கம் RFI வங்கியிடம் கடன் பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார். அந்த வங்கியோடு நாம் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார்.
நாடு பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உலக உணவு அமைப்பு, யுனிசெப் உட்பட சர்வதேச நிறுவனங்கள் அமைப்புகளிடம் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
அதேவேளை நாட்டில் பெரும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. அதனை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment