(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதாரத்தை வேண்டுமென்றே பாதிப்பிற்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை தவறான முறையில் வழிநடத்தி அவர்களின் கௌரவத்தை முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே இல்லாதொழித்துள்ளார். அவரை பின் தொடர்ந்தவர்களை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு அவர் பாதுகாப்பான முறையில் வலம் வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (18) இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்வங்கள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் செய்வதும், மக்களுக்காக சேவையாற்றுவதும் அடித்து கொலை செய்யும் அளவிற்கும், வீடுகளுக்கு தீ வைக்கும் குற்றமாயின் ஏன் நாம் அரசியல் செய்ய வேண்டும். எங்கு தவறிழைத்துள்ளோம்.
நமது வாழ்வில் பெருமளவிலான காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளோம். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடி தோற்றம் பெற்றது. பொருளாதார நெருக்கடி ஏற்படாமலிருந்தால் நாடு தற்போது இந்த நிலைமையினை எதிர்கொண்டிருக்காது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டில் பல விடயங்களை செயற்படுத்தினோம். அரசியலமைப்பின் 19அவது திருத்தம் ஊடாக பல முன்னேற்றங்களை அடைந்தோம்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இத்திருத்தம் ஊடாக ஏற்படப்போகும் விளைவுகளை முன்கூட்டியதாக எடுத்துரைத்தோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கம் முன்னெடுத்த தவறான தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணியாக அமைந்துள்ளது.
பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவரை பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி செயலாளராக நியமிக்க வேண்டாம் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். நிதி மோசடி குற்றச்சாட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டோம். எமது கருத்துக்கு அன்று மதிப்பளிக்கப்படவில்லை. பாராளுமன்றில் உரையாற்றும் வாய்ப்பும் கிடைக்கப் பெறவில்லை.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் வரிச் சலுகை வழங்கப்பட்டதால் 2.5 பில்லியன் நிதியை அரசாங்கம் இழந்தது. வரிச் சலுகை வழங்காமலிருந்திருந்தால் 2.5 பில்லியன் நிதி திறைசேரியில் இருந்திருக்கும், இன்று மில்லியன் நிதிக்கு கூட யாசகம் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
கடன் செலுத்த வேண்டாம், கடன் மீள் பரிசீலனை செய்வோம் என அஜித் நிவார்ட் கப்ராலிடம் குறிப்பிட்டோம். தேவையான அளவு டொலர் உள்ளது அரசமுறை கடனை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். தற்போது திறைசேரியில் மிகவும் குறைந்தளவிலான டொலர்கள் மாத்திரமே உள்ளது.
பொருளாதார நெருக்கடியினை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இவர்களுக்கு பதிலாக அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்படுகிறது. மோசடியாளர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் போது அதனை தடுக்காத சிரேஷ்ட உறுப்பினர்களும் தற்போது பொறுப்புக் கூற வேண்டும்.
சட்டவாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. சிறந்த எதிர்பார்ப்புகளுடன் பாராளுமன்றிற்கு தெரிவான இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இரட்டை குடியுரிமையுடையவர் பாராளுமன்றிற்கு வருவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டோம். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினை குறித்து இரட்டை குடியுரிமை கொண்டு நபருக்கு அக்கறை கிடையாது. அவரை பின் தொடர்ந்து அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. ஆனால் அவர் பாதுகாப்பான முறையில் சொகுசு தொடர்மாடியில் வாழ்கிறார்.
அமைச்சர்களை தவறான வழிநடத்தி இன்று தண்டனைக்குள்ளாக்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பஷில் ராஜபக்ஷவே இல்லாதொழித்துள்ளார். இரட்டை குடியுரிமை உள்ளவர் நாட்டின் எதிர்காலத்தை இல்லாதொழித்துள்ளார்.
21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனநாயக மிக்க அரசியல் செயலொழுங்கினை செயற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment