எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் முறைப்பாடு செய்யலாம் : மாதிரிகள் சுயாதீன குழுவினரால் பரிசோதனை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 7, 2022

எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால் முறைப்பாடு செய்யலாம் : மாதிரிகள் சுயாதீன குழுவினரால் பரிசோதனை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

(இராஜதுரை ஹஷான்)

பாவனையாளர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்றுக் கொள்ள கூடிய சுயாதீன குழுவினரால் பரிசோதிக்கப்படவுள்ளன.

எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் பாவனையாளர்கள் 011 234234, 011 5455130 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து குறிப்பிட முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எரிபொருளின் தரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய காணொளியை அடிப்படையாகக் கொண்டு குருநாகல், நாரம்மல ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்விரு நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருளை விநியோகித்த எரிபொருள் பௌஸர் கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு நிலையத்தின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுளளது.

குறித்த எரிபொருள் பெஸர் நாரம்மல எரிபொருள் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக தம்பதெனிய பிரதேசத்தில் உள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 92 ஒக்டென் ரக பெற்றோலை கொண்டு சென்றுள்ளது.

அவ்விரு நிரப்பு நிலையங்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருள் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எரிபொருளில் எவ்வித இதர பொருட்களும் கலக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் 472 எரிபொருள் பௌஸர் ஊடாக 92 ரக ஒக்டென் பெற்றோல் 60 இலட்சம் லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் தரம் தொடர்பில் இதுவரை எப்பிரதேசங்களில் இருந்தும் முறைப்பாடு கிடைக்கப் பெறவில்லை.

எரிபொருள் முனையம் அல்லது எரிபொருள் களஞ்சியசாலைகளில் இருந்து விநியோகிக்கப்படும் எரிபொருளின் தரம் தொடர்பில் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எரிபொருள் பௌஸருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வாகனத்தின் சாரதியுடன் எரிபொருளின் தரம் தொடர்பில் உறுதிப்பாடு எட்டப்படும்.

காலி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியினை அடிப்படையாகக் கொண்டு விரிவுப்படுத்தப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தாங்கியில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவதற்கு முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதை தொடர்ந்து விசாரணைகள் நிறைவு பெறும் வரை அந்த எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து, நுகர்வோருக்கு எரிபொருளை விநியோகிக்கும் வரை நான்கு கட்டங்களில் எரிபொருளின் தரம் பரிசோதனை செய்யப்படுகிறது.

பாவனையாளர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ள கூடிய சுயாதீன குழுவினரால் பரிசோதிக்கப்படவுள்ளன.

எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் பாவனையாளர்கள் 011.234234, 011.5455130 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து குறிப்பிட முடியும்.

No comments:

Post a Comment