(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடுமையாக அதிருப்தி வெளியிட்டார். பைத்தியக்காரர்களை போல் செயற்பட்டால் சபை நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது. எதிர்க்கட்சித் தலைவர் தமது தரப்பினரை முறையாக வழிநடத்த வேண்டும் இல்லாவிட்டால் சபை நடவடிக்கையினை ஒத்தி வைக்க நேரிடும் என சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடர் ஆரம்பத்தின் போது பிரதி சபாநாயகர் தெரிவு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் தாயார் திரு நடேசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக மொஹமட் முஸாம்மில் சபையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எதிர்த்தரப்பினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் 87 வயதுடைய மூத்த பிரஜை .திருநடேசனின் இல்லத்தில் ஒன்றிணைந்த அரசியல் சூழ்ச்சி செய்வதாக அவர் (மொஹமட் முஸாம்பில்) குறிப்பிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட மொஹமட் முஸாம்பில் சபையில் குறிப்பிட்ட விடயம் நூற்றுக்கு நூறு வீதம் சரி. அரசியல் டீல் நடவடிக்கைகளுக்காக தாயாரை நாம் பாவிக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தன் மதத்தை காட்டிக் கொடுத்த மத துரோகி இன்று என் தாயாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அனைத்து பொய்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து உரையாற்றுவதற்கு அனுமதி கோரியதால் அமைதியற்ற நிலைமை தோற்றம் பெற்றது.
தயவு செய்து ஆசனங்களில் அமருங்கள், எதிர்க்கட்சி தலைவரே உங்களுக்கு இவர்களை வழிநடத்த முடியாவிடின் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது பயனற்றது, பைத்தியம் போல் செயல்பட்டால் எவ்வாறு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது, இவ்வாறு நடந்து கொண்டால் சபை நடவடிக்கையினை இடைநிறுத்தி சென்று விடுவேன் என சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவரை நோக்கி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment