பாராளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தாக்கப்பட்டதால் சபையில் கடும் அமளி துமளி : சபாநாயகரை வீட்டுக் காவலில் வைக்க நேரும் என எச்சரிக்கை : செங்கோலை பாதுகாக்க முற்பட்ட படைக்கல சேவிதர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

பாராளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தாக்கப்பட்டதால் சபையில் கடும் அமளி துமளி : சபாநாயகரை வீட்டுக் காவலில் வைக்க நேரும் என எச்சரிக்கை : செங்கோலை பாதுகாக்க முற்பட்ட படைக்கல சேவிதர்கள்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்துக்கு வெளியில் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை, பாதுகாப்பு பிரிவினர் கடுமையாக தாக்குவதாகவும் அது தொடர்பில் சபாநாயகர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் ஆவேசத்துடன் தெரிவித்ததையடுத்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .

அத்துடன் சபாநாகருக்கு சபைக்கு வர முடியாவிட்டால் சபையை ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை நடுவில் வந்தததால் சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபைக்கு தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே சபையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. காலை முதல் சபை நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்ற நிலையில் மாலை 3 மணியளவில் விவாதத்தில் உரையாற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி யின் பெயர் அழைக்கப்பட்டது.

இதன்போது அவர், விவாதத்தில் உரையாற்ற நேரம் வழங்கப்பட்டாலும் தற்போது உரையாற்று முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஏனெனில் வெளியில் அமைதியாக போராடும் மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துக்கின்றனர். அதனை உடனடியாக நிறுத்துமாறு சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என்றார்

அத்துடன் சபாநாயகரை உடனடியாக சபைக்கு வருமாறு அறிவித்தல் வழங்க வேண்டும் என்றார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலவரும் சூழ்ந்துகொண்டு சபாநாயகரை உடனடியாக வரவழைக்க வேண்டும் என குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே, சபாநாயரை வருமாறு அழைப்பு விடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. என்றாலும் இது தொடர்பில் செயலாளர் ஊடாக அறிவுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த புத்திக்க பத்திரண, வெளியில் போராடும் இளைஞர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரகை தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை சமூக வலைத்தளங்கள் நேரலையாக ஒளிப்பரப்புகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் பாராளுமன்றத்தையும் போராட்டக் காரர்கள் நொருக்குவார்கள். அதனால் சபாநாயகரை உடனடியாக வரச் சொல்லுங்கள். இதற்கு பொறுப்புகுகூற வேண்டிய அமைச்சர்கள் யாரும் சபையில் இல்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகையில், சபாநாயகர் இந்த இடத்துக்கு வராவிட்டால், அவரை வீட்டுக் காவலில் வைப்போம். சபாநாயகரை இன்று வீட்டுக்கு அனுப்பப்போவதில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதி குறிப்பிடாவிட்டால் போராட்டக் காரர்களை பாராளுமன்றத்து அழைத்து வருவோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய குறிப்பிடுகையில், சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினருக்கு தீர்மானம் ஒன்றை எடுக்கலாம். அதனால் நீங்கள் அனைவரும் நாடகம் ஆடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, சமிந்த விஜேசிறி ஆகியோர் கூச்சலிட்டவாறு சபைக்கு நடுவே இறங்கி செங்கோலை தூக்க முற்பட்டபோது ஓடிவந்த படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவும், உதவி படைக்கல சேவிதர்களும் செங்கோலை பாதுகாக்க முற்பட்டனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கீழே விழுந்து விட்டார். எனினும் மீண்டும் எழுந்த அவர் செங்கோலை பாதுகாக்க தொடர்ந்தும் முயற்சித்த நிலையில் மீண்டும் கீழே விழுந்தார்.

இந்த நிலைமையையடுத்து அப்போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்து மாலை 3 மணியளவில் சபையை ஒத்தி வைத்தார்.

சபையை ஒத்திவைத்து ஹேஷா விதானகே சபாநாயகரின் அறைக்கு செல்லும்போது ஹரின் பெர்னாண்டோ மற்றும் சிலரும் கோபாவேஷத்துடன் சபாநாயகரின் அறையை நோக்கி சென்றனர்.

இவ்வாறான சூழலில் சபை மீண்டும் 3.30 மணிக்கு கூடிய நிலையில் சபைக்கு வந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (வெள்ளிக்கிழமை) சபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் திங்கட்கிழமை கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும்.

வெளியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எனது கவலையை தெரிவிக்கின்றேன். அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு போராட்டக் காரர்களை கோருகின்றேன்.

பாராளுமன்றத்துக்கு வெளியே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிகின்றேன். வெளியில் இடம்பெறும் சம்பவத்தை சபைக்கு தெரியப்படுத்தியமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அத்துடன் சபையை எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கின்றேன் என அறிவித்து விட்டு எழுந்தார்.

அப்போது சபையை ஒத்தி வைக்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் கூச்சலிட்ட போதும் சபாநாயகர் எதனையும் காதில் வாங்கிக் கொள்ளாது சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment