இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது : முச்சக்கர வண்டிகள், கெப், வேன் என்பன கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற 67 பேர் கைது : முச்சக்கர வண்டிகள், கெப், வேன் என்பன கைப்பற்றல்

இலங்கையிலுள்ள திருகோணமலை மற்றும் அதனை அருகே உள்ள கடற்கரை பகுதிகளின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களை நேற்றையதினம் (23) கைது செய்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

திருகோணமலை மற்றும் சாம்பல் தீவு ஆகிய கடல் பிராந்தியங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி போலீசார் இணைந்து நேற்றிரவு நடத்திய சுற்றி வளைப்பில் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுகளை பயன்படுத்தி திருகோணமலை கடற்பரப்பில் விசேட சோதனை நடவடிக்கையொன்று நடந்துள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 ஆண்களும், 7 பெண்களும், 3 சிறு குழந்தைகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆட்கடத்தல் காரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, ரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஒரு வேன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கடற்படையினர், போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில், உயிர் அச்சுறுத்தலுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதன் ஊடாக, தமது உயிர் மற்றும் சொத்துகளை இழக்க வேண்டாம் என கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment