21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சகல கட்சிகளுக்கும் வழங்கி, மேலதிக திருத்தங்கள், நிலைப்பாடுகளை கோர தீர்மானம் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சகல கட்சிகளுக்கும் வழங்கி, மேலதிக திருத்தங்கள், நிலைப்பாடுகளை கோர தீர்மானம் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வாரத்திற்குள் நிறைவு செய்வதற்கும், அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நீதித்துறை அமைச்சரால் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த திருத்தம் நேற்று எமக்கு வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் குறித்த யோசனையை வழங்கி, அது தொடர்பான மேலதிக திருத்தங்கள் மற்றும் நிலைப்பாடுகளை கோருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இவ்வாரத்திற்குள் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு நிறைவேற்றதிகாரத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் இதற்கு ஜனாதிபதியும் தனது இணக்கத்தைத் தெரிவித்தார்.

இத்திருத்தத்தில் நிறைவேற்றதிகாரத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது மாத்திரமின்றி, இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற 19 இன் உள்ளடக்கத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் சிலர் இதற்கு ஆதரவை தெரிவித்துள்ள போதிலும், மேலும் சிலர் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை விட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் 21 ஐ விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment