அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு : 4 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 29, 2022

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு : 4 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட குழு நியமனம்

(எம்.மனோசித்ரா)

களுத்துறை மாவட்டம் , பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் சுமார் 30 மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மொஹம்மட் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும், மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறுமியின் மரணம் தொடர்பில் அவரது தந்தை உள்ளிட்ட 20 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு, 4 பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அட்டலுகம - எபிட்டமுல்ல பிரதேசத்தில் வசித்து வந்த சிறுமி ஆயிஷா கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோழி இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்காகச் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

எனினும் கடைக்குச் சென்று ஒரு மணித்தியாலத்தின் பின்னரும் அவர் வீடு திரும்பாததையடுத்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததையடுத்து பெற்றோர் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமி கடைக்குச் சென்ற மற்றும் கடையிலிருந்து வெளியேறிய காட்சிகள் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காணொளி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எவ்வாறிருப்பினும் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் சிறுமி ஆயிஷாவின் சடலம் அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலுள்ள சேற்று நிலமொன்றில் புதைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பெற்றோரால் அது ஆயிஷாவின் சடலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து குறித்த பிரிவிற்கு பொறுப்பான ஸ்தள நீதவான் விசாரணைகள் பாணந்துரை பதில் நீதவான் இந்திராணி உடவத்தவினால் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு இது தொடர்பில் பாணந்துரை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகேவின் தலைமையில் 4 பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய சிறுமியின் தந்தை உள்ளிட்ட 20 பேரிடம் நேற்றையதினம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பாணந்துரை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தில் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முடிவுகள் கிடைத்த பின்னர் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் பாணந்துரை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்னவினால் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும், மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொடர் விசாரணைகளுக்காக பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும் நேற்று மாலை வரை சிறுமியின் மரணத்திற்கான காரணம் இனங்காணப்படவில்லை என்பதோடு, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment