(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் போது மக்கள் மனங்களிலும், எம்மத்தியிலும் இருந்த மகிழ்ச்சி தற்போது முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மக்களின் போராட்டம் மற்றும் துயரம் தீவிரமடைந்துள்ளது.
நாட்டு மக்கள் ஒன்றினைந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை துரத்தியடிக்க முன்னர் ஜனாதிபதி அவரை பதவி நீக்க வேண்டும் இல்லாவிடின் நாங்களும் மாற்று தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மற்றும் பெல்லன்வில தம்மரத்ன தேரர் ஒன்றினைந்து வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (2 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கையில், பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்ட போது மக்கள் மனங்களிலும் எம் மத்தியிலும் காணப்பட்ட மகிழ்ச்சி தற்போது முழுமையாக இல்லாதொழிந்துள்ளது என்பதே உண்மை.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மக்களின் போராட்டமும், மக்களின் துயரமும் தீவிரமடைந்துள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாத காரணத்தினால் மக்கள் தன்னிச்சையாக வீதிக்கிறங்கியுள்ளார்கள். மக்களின் போராட்டத்தை ஒரு கட்டத்திற்கு மேல் எப்படைகளாலும் அடக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் நிர்வாகத்தில் சிறந்த முகாமைத்துவமும், கண்காணிப்பும் கிடையாது. தவறான ஆலோசனைகளின் பிரகாரமே அரச தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அதன் விளைவை தற்போது ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்கிறார்கள்.
நிதியமைச்சர் பஷில் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். 6 மாத காலத்திற்கு அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர் அமெரிக்காவிற்கு தப்பி சென்றுள்ளார்.
நாட்டு மக்கள் அவரை துரத்தியடிக்க முன்னர் ஜனாதிபதி அவரை நிதியமைச்சு பதவியில் இருந்து நீக்க வேண்டும். சிறந்த தீர்மானங்களை ஜனாதிபதி முன்னெடுக்காவிடின் நாமும் மாற்று தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் என்றார்.
மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நிர்வாகம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீர்மூலமாக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பும், நாட்டு மக்களின் பற்றும் இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டமை செய்த முதலாவது தவறாகும்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவா, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவா என்ற போது மகாசங்கத்தினர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரிற்கு ஆதரவு வழங்கினார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மகாசங்கத்தினரும் சிறந்த தீர்மானத்தை முன்னெடுப்பார்கள் என்றார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தம்மரத்ன தேரர் தெரிவிக்கையில், கொவிட் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொவிட் தாக்கம் இலங்கைக்கு மாத்திரம் பாதிப்பு செலுத்தவில்லை.
இலங்கையை காட்டிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகள் கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையை காட்டிலும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளது.
தவறான தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய நோக்கங்களை செயற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் அரசாங்கமும் அதற்கு சார்பாகவே செயற்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment