அனுருத்த பண்டாரவின் கைது அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் குரலையும் எழுச்சிகளையும் முடக்கும் செயல் : ருவான் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

அனுருத்த பண்டாரவின் கைது அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் குரலையும் எழுச்சிகளையும் முடக்கும் செயல் : ருவான் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவின் கைது நடவடிக்கையானது அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் குரலையும் எழுச்சிகளையும் நசுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதையே காட்டுகிறது. மக்களின் குரலுக்கு பயந்து அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோரி மக்கள் வீதியில் இறங்கிய நிலையில் அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை ஒடுக்கி வருகின்றது.

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குமாறு கோரி ஜனாதிபதியின் மிரிஹான தனியார் இல்லத்திற்கு முன்னால் சென்ற மக்களின் ஆர்ப்பாட்டத்திலும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது.

பத்திரிக்கையாளர்களைக் கூட தாக்கும் அளவுக்கு வெட்கமின்றி அரசாங்கம் அடாவடியாக நடந்து கொண்டது. மக்களுக்கு உணவளிக்க முடியாத அரசு, தற்போது சிவில் சமூக ஆர்வலர்கள் மீதும், சமூக ஊடக ஆர்வலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் வீதியில் இறங்க திட்டமிட்டுள்ளனர். இது முன்னேற்றத்தின் அடையாளம். சமூக ஊடகங்களை ஊக்குவிப்பதே செழுமையின் பார்வை என்றாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அது சமூக ஊடகங்களை நசுக்கும் செற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இன்று காலை மக்கள் தமது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் கோரி பாரபட்சமின்றி வீதியில் இறங்கத் தயாராக இருந்தனர். இது சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த அனுருத்த பண்டார என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பொலிஸார் என கூறிக் கொள்ளும் குழுவினர் இரவு வந்து இவரை அழைத்துச் சென்றதாகவும், ஆனால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது அவ்வாறான ஒருவரை அழைத்து வரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பின்னர், சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை எதிர்கொண்டு, அந்த இளைஞன் காவல்துறையில் இருப்பதை வெட்கமற்ற அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக எழும் மக்களைக் கொல்வது ஒரு ஜனநாயக நாட்டின் தலைமைக்கு ஏற்புடையதல்ல. அரசியல் சட்டம் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. மக்களின் குரலுக்கு பயந்து அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

அவசரகாலச் சட்டத்தின் கீழ், எந்த நேரத்திலும் பிடியாணை இன்றி ஒருவரை 24 மணி நேரம் காவலில் வைக்கலாம். சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவின் கைது நடவடிக்கையானது அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் குரலையும் எழுச்சிகளையும் நசுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதையே காட்டுகிறது.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் வன்முறைக் கொள்கைக்கு எதிராக நடத்தப்படும் கட்சி சார்பற்ற போராட்டத்தால் அச்சமடைந்த அவர்கள், அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அடக்குமுறைக் கொள்கையை மட்டும் வெட்கமின்றி வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத பட்சத்தில் அவசரகாலச் சட்டத்தை விதித்து மக்களை அடக்கும் அரசாங்கத்தின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாரிய பேரணிகளை தடியடிகளாலோ, கண்ணீர் புகைக் குண்டுகளாலோ அல்லது கைதுகளாலோ நிறுத்த முடியாது என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம்.

எனவே, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொருளாதார நெருக்கடியால் சோர்வடைந்துள்ள மக்களை மேலும் அடக்குமுறை நடவடிக்கைகளால் ஒடுக்காமல் இருக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்

No comments:

Post a Comment