(எம்.மனோசித்ரா)
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றவாளிகள் அல்ல. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் அடிப்படைவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கிறது. எனினும் இவ்வாறான சூழ்ச்சிகள் இனி வெற்றி பெறாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் சுக போகங்களை அனுபவிப்பதை நிறுத்தவில்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. மாறாக மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைகள் ஊடாக முடக்குவதற்கே முயற்சிக்கிறது.
மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மாத்திரமின்றி ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கு முயற்சித்த அரசாங்கம், பின்னர் பொதுச் சொத்து பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. எவ்வாறிருப்பினும் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அடக்குமுறைகள் ஊடாக மக்களின் குரலை முடக்க முடியாது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திலேயே இருக்கின்றனர்.
சட்டத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. காரணம் சட்டத்துறையும் மக்களுடனேயே இருக்கிறது. மக்களை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் அவசரகால நிலைமை சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களின் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அது மாத்திரமின்றி ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி அடிப்படைவாதத்தை தூண்டவும் முயற்சிக்கிறது.
மிரிஹானையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் நுழைந்து, அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே அங்கு வன்முறையான சூழலை தோற்றுவித்துள்ளனர் என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் மக்களுக்கு தெரியாமல் எந்தவொரு சதிச் செயலையும் அரசாங்கத்தினால் செயற்படுத்த முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment